ஐரோப்பாவின் குவாண்டம் ஆராய்ச்சியைச் சந்தைக்கு ஏற்ற உற்பத்திகளாகவும் சேவைகளாகவும் மாற்றுவதை இலக்காகக் கொண்ட குவாண்டம் சட்டம் (Quantum Act) எனும் புதிய சட்டக் கட்டமைப்பை ஐரோப்பிய ஆணைக்குழு புதன்கிழமை (2026 நவம்பர் 25) முன்மொழிந்துள்ளது. விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதும், டிஜிட்டல் கட்டமைப்புகளை போஸ்ட்-குவாண்டம் குறியாக்கவியலுக்கு (post-quantum cryptography) தயார்படுத்துவதும் இதன் ஏனைய நோக்கங்களாகும்.

இறைமை தொழில்நுட்ப பங்கு நிதியம் (Sovereign Tech Equity Fund - STEF) எனும் புதிய முதலீட்டுப் பொறிமுறைக்கும் இந்த முன்மொழிவு அடித்தளமிடுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்தின் மூன்று தூண்கள்

ஆராய்ச்சியில் சிறப்பு, குவாண்டம் தொழில்நுட்பத்தை நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல், கட்டமைப்புகளையும் விநியோகங்களையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் ஆகிய மூன்று தூண்களை இச்சட்டம் கொண்டுள்ளதாக ஆணைக்குழு கூறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உறுப்பு நாடுகளினதும் திட்டங்களைப் பொதுவான முன்னுரிமைகளின் கீழ் ஒன்றிணைக்கும் Quantum Europe Framework Initiative ஊடாக இவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

முன்னணி ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய வலையமைப்பு ஒன்றும், பாரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான இலக்கு நிதிப் போட்டிகளான Grand Challenges திட்டமும் இதில் அடங்குகின்றன. பிழைகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து இயங்கக்கூடிய குவாண்டம் கணினிகள், செய்மதி சமிக்ஞைகள் இன்றி இயங்கும் வழிகாட்டல் சாதனங்கள் போன்றவற்றை ஆணைக்குழு உதாரணங்களாகக் குறிப்பிட்டுள்ளது. புத்தாக்க நிறுவனங்களும் (start-ups) சிறிய, நடுத்தர நிறுவனங்களும் சந்தைக்குத் தயாரான உற்பத்திகளை உருவாக்க Quantum Technology and Innovation Hubs உதவும்.

ஆணைக்குழுவையும் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய Quantum Strategy Board தேசிய மற்றும் ஐரோப்பியத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் அதேவேளை, European Quantum Alliance அரச மற்றும் தனியார் தரப்புகளை ஒன்றிணைக்கும்.

புதிய பங்கு முதலீட்டு நிதியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப இறைமைக்கும் பொருளாதாரப் பாதுகாப்புக்கும் அத்தியாவசியமான தொழில்நுட்பங்களுக்குப் பங்கு முதலீடு (equity) மற்றும் அதையொத்த நிதியுதவிகளை இந்த நிதியம் வழங்கும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய முதலீட்டு வங்கிக் குழுமம் (EIB Group) மற்றும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து இந்நிதியத்தை விரைவாக நிறுவவுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இம்முன்மொழிவை அறிமுகப்படுத்திய, தொழில்நுட்ப இறைமை, பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கான நிறைவேற்று உப தலைவர் ஹென்னா விர்க்குனென் (Henna Virkkunen), உலகளாவிய தனியார் முதலீட்டில் ஐரோப்பிய குவாண்டம் புத்தாக்க நிறுவனங்கள் 5% மாத்திரமே பெற்றுள்ளதாகவும், அமெரிக்காவில் இது 50% எனவும் சுட்டிக்காட்டினார். பாரியளவிலான நேரடிப் பங்கு முதலீடுகளில் இந்நிதியம் கவனம் செலுத்தும் என்றும், Scaleup Europe Fund போன்ற தற்போதைய பொறிமுறைகளுக்கு இது துணைநிற்கும் என்றும் அவர் கூறினார். "நிதிப் பற்றாக்குறை காரணமாக எந்தவொரு நிறுவனமும் ஐரோப்பாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படக்கூடாது" என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டம்

ஐரோப்பிய பாராளுமன்றமும் ஐரோப்பிய ஒன்றியப் பேரவையும் (Council) இனி இம்முன்மொழிவைப் பரிசீலிக்கும். 2030ஆம் ஆண்டளவில் குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஐரோப்பாவை உலகின் முன்னணி சக்தியாக்கும் Quantum Europe Strategy இலக்குக்கு இச்சட்டம் உறுதுணையாக அமையும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் குவாண்டம் துறையில் 11 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான அரச முதலீட்டை மேற்கொண்டுள்ளதாக 2025ஆம் ஆண்டின் அந்த உத்தி அறிக்கையிட்டிருந்ததாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.