கண்டியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் (புனித தந்தத் தாது ஆலயம்) புதுப்பிக்கப்பட்ட பொற்கூரை 2026 நவம்பர் 20 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தின் ஊடகப் பிரிவு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்த பெருமானின் இடது புனித தந்தத் தாது வைக்கப்பட்டுள்ள இரு மாடி உள் மண்டபத்துக்கு மேலே இப்பொற்கூரை அமைந்துள்ளது. காலப்போக்கில் பொற்கூரையின் தங்கத் தகடுகள் நிறம் மங்கித் தேய்ந்ததால், அதன் பழைய பொலிவு படிப்படியாகக் குறைந்திருந்தது.

1987இல் அர்ப்பணிப்பு

அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச 1987இல் இப்பொற்கூரையை ஆலயத்துக்கு அர்ப்பணித்தார். அரச பொறியியல் கூட்டுத்தாபனம் (State Engineering Corporation) பொறியியலாளர் கெமுனு சில்வா தலைமையில், உள்நாட்டு, வெளிநாட்டுப் பொறியியல் குழுக்களுடன் இணைந்து அதன் மூல வடிவமைப்பைத் தயாரித்தது. 2002, 2018 ஆகிய ஆண்டுகளில் இது ஏற்கெனவே புனரமைக்கப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணிகள்

மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் ஆசியுடனும் தியவடன நிலமேயின் வழிகாட்டலுடனும் 2025இல் இம்முறை புனரமைப்பு ஆரம்பமானது. தாய்லாந்தின் வாட் மார்ப் ஜான் விகாரையின் அனுசரணையுடனும் விஸ்வ பாரமி அறக்கட்டளையின் (Vishwa Parami Foundation) முன்னெடுப்பிலும் பணிகள் இடம்பெற்றதாக ஆலயம் தெரிவிக்கிறது.

பொற்கூரையின் 2,900 சதுர அடி மேற்பரப்பு முழுவதும் 24 கரட் தங்க மொசைக் வேலைப்பாடுகளால் புதுப்பிக்கப்பட்டது. புகழ்பெற்ற இத்தாலிய நிறுவனமொன்றின் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வடிவமைப்புகளும் பெறப்பட்டதுடன், முன்னணிப் பொறியியல் நிறுவனங்களின் ஆலோசனையும் பல உள்நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பும் கிடைத்ததாக ஆலயம் கூறுகிறது.

உலோகச் சட்டகம் பொறியியல் ரீதியாகப் பரிசோதிக்கப்பட்டுச் சீரமைக்கப்பட்டதுடன், தங்கத் தாமரை அலங்காரங்கள் உள்ளிட்ட அனைத்து அலங்கார வேலைப்பாடுகளும் புதுப்பிக்கப்பட்டன. பொற்கூரைக்கு மேலுள்ள இரு கலசங்களும் சிங்கப்பூரின் ரோயல் இன்சிக்னியா (Royal Insignia) நிறுவனத்தால் தூய தங்கத்தில் உருவாக்கப்பட்டன. ஜப்பானின் இவாசாகி (Iwasaki) நிறுவனத்தின் High-Beam Eye Light ஒளியமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

திறப்பு விழா

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், மகா சங்கத்தினர், தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, வாட் மார்ப் ஜான் விகாரையின் அதிபூஜ்ய லுவாங் போ அனன் அகஞ்சகனோ தேரர் தலைமையிலான தாய்லாந்துத் தூதுக்குழு ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டதாக ஆலயம் தெரிவித்தது.

ஸ்ரீ தலதா மாளிகையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இப்பொற்கூரை, உள்நாட்டு, வெளிநாட்டுப் பக்தர்களதும் பார்வையாளர்களதும் சிறப்புக் கவனத்தை ஈர்க்கும் ஒன்று என ஆலயம் குறிப்பிடுகிறது.